முனிவர்கள் தாங்கள் ஒரு வேள்வியைத் தொடங்குவதற்கு ஏற்ற இடத்தைக் காட்டுமாறு பிரம்மதேவனிடம் சென்று வேண்டினர். பிரம்மா ஒரு விமானத்தைக் கொடுத்து அதன் சக்கரம் (நேமி) எங்கு விழுகின்றதோ அங்கு சென்று வேள்வி செய்யுமாறு கூறினார். சக்கரம் இந்த ஸ்தலத்தில் விழுந்ததால், முனிவர்கள் இங்கு வேள்வியைத் தொடங்கி அதன் அவிர்பாகத்தை திருமாலுக்கு அளித்தனர். பகவான் காட்சிக் கொடுத்து அவிர்பாகத்தை ஏற்றுக் கொண்டு முனிவர்களுக்கு அருள்புரிந்தார். காடாக இருந்த இந்த இடத்தில் நேமி விழுந்ததால் 'நேமிசாரண்யம்' என்று பெயர் பெற்றது. பின்னர் மருவி 'நைமிசாரண்யம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் தேவராஜன், ஸ்ரீஹரி என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு ஸ்ரீஹரிலட்சுமி, புண்டரீகவல்லி என்று இரண்டு திருநாமங்கள். இங்கு கோயில் எதுவும் இல்லை. பகவான் ஆரண்ய ஸ்வரூபியாக இருப்பதாகக் கருதி, காட்டையே வணங்குகிறார்கள். இந்திரன், வேதவியாசர், சுதர்மன், தேவரிஷி, சூதபுராணிகர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
கோமுகி நதிக்குச் செல்லும் வழியில் 'வியாஸகட்டீ' என்னும் இடத்தில் வியாச முனிவருக்கு கோயில் உள்ளது. இங்குதான் வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் பாரதம், பாகவதம் முதலிய இதிகாசங்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. விகானாஸாசாரியார் அவதரித்த ஸ்தலம். அவருக்கு ஒரு சந்நிதியும் இருக்கிறது.
ஊரின் மற்றொரு பகுதியில், சுகமுனிவருக்கு ஒரு கோயிலும், பாலாஜி மந்திர் என்று ஒரு பெருமாள் கோயிலும் உள்ளது. 'ஹனுமன்கட்டீ' என்னும் இடத்தில் சிறு குன்றின் மீது ஹனுமன் ஆலயம் ஒன்றும் உள்ளது.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|